எங்களுக்கு ஊக்கம் அளித்த 5 தமிழ் ஆளுமைகள் !
1. ஒரிசா பாலு (கடல் ஆய்வாளர்)
தமிழ் வரலாற்று ஆர்வலர்கள், தமிழ் நேசர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மனிதர், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தமிழர் வரலாறு எப்படி கடல் வழியே நீண்டு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதிலே ஈடுபட்டுவந்தவர். இவருடைய ஆய்வுகள், வணிகம், கலாச்சாரம், தமிழரின் கட்டுமான திறன், விஞ்ஞான அறிவு என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று, உலகின் மூத்தகுடி தமிழ் என்பதற்கான பல சான்றுகளை திரட்டி பாதுகாத்து வருகிறார். சமூக வாழ்வில் பல நெருக்கடிகளை, துன்பங்களை தாண்டி இன்று ஒரு சிறப்பான தளத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி தர உழைத்து வருகிறார். அவற்றில் சில 'ஐயை' - பெண்களுக்கான அமைப்பு, குமரிக்கண்டம், பூம்புகார், சென்னை - பாண்டிச்சேரி பகுதிகளில் கடல் சார் ஆய்வுகள் பலவற்றில் ஈடுபட்டதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மத்தியில் சோர்வு கொள்ளாமல் தன்னை வலிமை படுத்தி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும், ஆய்வுக்கான உத்வேகத்தையும் ஊட்டி வருகிறார்.
2013-ம் ஆண்டு இறுதியில் ஐயா அவர்களை முதன் முதலாக சந்தித்தோம்! அது முதலே எங்கள் வளர்ச்சியை பற்றி அதிகம் அக்கறை கொண்டுவருகிறார். தமிழர்களின் பெருமைக்குரிய விடயம் நம் வரலாறு அல்ல, நாம் தற்போது செய்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் கிடைக்கப்பெறும் வணிக வெற்றி மட்டுமே நம்மை உலக அரங்கில் சரியான அங்கீகாரத்தை பெற்றுத்தரமுடியும் என்பதை அடிக்கடி உணர்த்தி எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் அளித்த வரலாற்று தரவுகள், ஆதாரங்கள் தான் எங்களை மென்மேலும் தமிழ் ஆடைகளில் புதுமைகள் செய்யவும், எங்களின் இதர வணிக முயற்சிகளும் வெற்றியடைய உறுதுனையாய் இருந்து வருகிறது.
2. இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்
கோ. நம்மாழ்வார், (6 April 1938 – 30 December 2013) ஐயா விவசாயம் சார்ந்த படிப்பு படித்து ஒரு சராசரி அலுவராக கோவில்பட்டியில் பணியில் சேர்ந்தார், ஆனால் நடைமுறை விவசாயத்தில் உள்ள பல தவறான வழிமுறையினால் நம் மண் மலடாக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து மண் மீதான தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார், தன சகபணியாட்களும், அரசும் இதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுத்ததை அடுத்து 1979-இல் 'குடும்பம்' என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு தரப்பட்ட விவசாயிகளிடம் கலந்து ஆராய்ந்து விவசாய முறைகளை ஒழுங்குமுறை படுத்தி புது புது உத்திகளை எளிமையாக கற்றுத்தந்தார். இயற்கை விவசாயத்தின் தந்தை என்று அழைக்க கூடிய அளவிற்கு பல அறிய நூல்களை எழுதியுள்ளார். மரபணு மாற்றப்பட்ட விதைகள், கத்திரிக்காய், கடுகு போன்றவை சந்தைக்கு வருவதை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.
வேம்புக்கு காப்புரிமையை பெற முயற்சிசெய்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு எதிராக அவரின் நுட்பமான அறிவால் வென்றார். இப்படி பல சாதனைகள் இயற்கையின் மீது கொண்ட பாசத்தால் பல ஆராய்ச்சிகள் மூலம், இயற்கையான முறையில் வேளாண்மை துறையில் நல்ல வளர்ச்சி காண பல்வேறு அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எளிமையான முறையில் பயிற்சி வழங்கி வந்தார். 2013-ம் ஆண்டு இறுதியில் அவரிடம் முதன் முதலாக பேச வாய்ப்பு கிட்டியது, "வாழ்க வளமுடன்" என்ற வார்த்தைகளால் பேச்சை எப்போதும் தொடங்கும் அவரின் உயரிய எண்ணம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது, SSN கல்லூரியில் நடைபெற இருந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கவே 2 - 3 முறை பேசினோம், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 1 வாரம் முன்பே அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் அவரின் எண்ணம், செயல் எங்கள் அமைப்பை இன்னும் துணிவோடு செயல்பட ஊக்கம் தந்தது.
3. 'தோசா பிளாசா' பிரேம் கணபதி
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் கணபதி, தனது பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தியவர் மும்பை வரை சென்று மொழிதெரியாத இடத்தில் தனது கடின உழைப்பால் மாபெரும் சிகரத்தை அடைந்தவர், தமிழ் மொழி மீதும் நம் பாரம்பரியத்தின் மீதும் அளவில்லா பற்று உடையவராய் விளங்கும் இவர், மும்பையை தலைமை இடமாக கொண்டு "தோசா பிளாசா" என்ற சங்கிலி-தொடர் உணவு விடுதிகள் நடத்திவருகிறார், தோசையை உலகறியச்செய்த புகழ் இவரையே சேரும் என்று சொன்னால் மிகை ஆகாது.
2014 -ம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை தமிழ் சங்கத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது, நல்ல கணீர் என்ற குரலில் ஒருவர் பேசினார், எங்களது முயற்சியை பாராட்டி சில யோசனைகளையும், அறிவுரைகளையும் தந்தார் தன்னை பற்றி அறிமுகம் செய்யும் பொழுது, ரஷ்மி பன்சால் எழுதிய "Connect the Dots" புத்தகத்தின் முதல் கட்டுரை தன்னை பற்றித்தான் என்று சொன்னார். உடனே நண்பர் ஒருவரிடம் இருந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்து மெய்சிலிர்த்து போனேன் எவ்வளவு எளிமையான மனிதர் இவர் என்று, தனது பால்ய காலத்தில் எத்தனை துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அனைத்தையும் சந்தித்த மனிதர் வாழ்வில் பெரிய பெரிய வெற்றிகளை கடந்து வந்தவர், வணிகத்தில் ஒரு சிறு துரும்பாக இருக்கும் எங்களை மெனக்கெடுத்து அழைத்து அறிவுரை சொல்வதென்றால் நினைத்தே பார்க்கமுடியாத அளவிற்கு எவ்வளவு பண்பானவர், தமிழ் இனத்தின் மீது அளவில்லா பற்றுள்ளவர் என்பதை புரிந்துகொண்டோம். நம் முன்மாதிரிகளை சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் தேடுவது விடுத்து இது போன்றவர்களை முன்மாதிரிகளாய் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்த தருணம் அது. அவரின் வாழ்க்கை பயணம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், இன்னும் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தை தந்து வருகிறது.
4. 'வலைத்தமிழ்.com' ச. பார்த்தசாரதி
CEO & Founder - Valaitamil.com
மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட ஐயா. பார்த்தசாரதி அவர்கள் 2014 -ம் ஆண்டு தொடக்கத்தில் எங்கள் முயற்சியை பார்த்து அமெரிக்காவில் இருந்து அழைத்து பேசினார். தமிழ் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை, கல்வி, விவசாயம், சித்தமருத்துவம் என அனைத்தையும் பாதுகாக்க நம் வணிக வெற்றி மிகவும் முக்கியம் என்றார், இந்த அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை பெரிதும் செய்துவருகிறார் என்பது எங்களை மிகவும் ஆச்சர்யப்படவைத்தது. உரிமையுடன், நாங்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தக்க தருணங்களில் நெறிப்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. தாம் நடத்திவரும் (www.valaitamil.com)இணைய பத்திரிக்கையில் எங்கள் நிறுவனம் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க வாழ் தமிழர்களிடமும் பிரபலமடைய மிகவும் உதவினார்.
தமிழில் முதன் முதலாக 'பிறந்தநாள் வாழ்த்து' பாடலை உருவாக்கி, பட்டி தொட்டி முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையாக எளிமையான தமிழில் தித்திக்கும் தேன் குரலில் உத்ரா உன்னிகிருஷ்னனால் பாடப்பெற்று வெளியீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல நண்பர்களும் பிறந்தநாள் விழாவிற்கு இந்த பாடலையே ஒலிக்கச் செய்துவருகிறார்கள் என்பது அவரது உழைப்பிற்கும், நல் எண்ணத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே குறிப்பிடலாம். இது மட்டுமில்லாது தமிழகத்திலும் சித்தமருத்துவர்களை ஒன்றிணைக்கும் விதமாக உலக சித்தா அறக்கட்டளை உருவாக காரணியாக இருந்தவர், 2015, 2016-ம் ஆண்டு உலக சித்தர் மரபு திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி பல்வேறு அமைப்புகளும் முன்னெடுக்கும் வகையாக நல்லதொரு துவக்கத்தை செய்தார் என்பது தனிச்சிறப்பு.
5. ஈமெயில் விஞ்ஞானி சிவா ஐயாத்துரை
எங்கள் ஊரை பூர்வீகமாக கொண்டவர் தான் ஐயா சிவா ஐயாத்துரை, மின்னஞ்சல் என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பை தனது 14வது வயதில் நிகழ்த்தினார் என்பது அனைவரையும் ஆச்சர்யமூட்டும் செய்தி தான், எங்கள் பாட்டனாரும், அவரின் தந்தையார் அவர்களும் என எங்கள் ஊரை சேர்ந்த பலர் பர்மா நாட்டில் தங்களது பால்யகாலத்தில் வளர்ந்து வந்தனர், அங்கே மிகவும் கடினமாக உழைத்து விவசாயம், வணிகம் என செய்து நிறைய சம்பாதித்தவர்கள், ஆனால் அங்கே ஏற்பட்ட போர் காரணமாக சேர்த்த அனைத்து சொத்துக்களையும் விட்டு நீங்கி உயிர் பிழைத்து நம் தமிழகம் திரும்பினார்கள்.
இளம் வயதில் இருந்து தமிழ் மொழியை, தமிழ் இலக்கியங்களை கற்றுணர்த்தவர் சிவா அவர்களின் தந்தை, அதே போல் தன் தாயும் மிகவும் துன்பமிகுந்து சூழலில் வளர்ந்தவர்., இருவரும் தாங்கள் பெற்ற நல்ல கல்வி மூலம் முன்னேறி அமெரிக்க மண்ணிற்கு 1970-களில் வேலை நிமித்தமாக சென்றுள்ளனர். அவர் தாய் வேலை பார்த்த ஒரு மருத்துவ கூடத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப சிக்கல்களை உணர்ந்து மருத்துவர் மைக்கேல்சன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டது தான் EMAIL என்று அழைக்கப்படும் மின்னஞ்சல், இதற்கான காப்புரிமையையும் 1982-ம் ஆண்டு பெற்றார்.
எனினும் அமெரிக்க நிறுவனமான ஒன்றின் அதிகாரி ரே டொமில்சன், தான் தான் ஈமெயில் கண்டுபிடித்தவர் என்று கூறிக்கொண்டார், இதனால் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி நம் சிவா அய்யாதுரை பல்வேறு கண்டுபிடுப்புகளையும் நிகழ்த்தியுள்ளார், சமீபத்திய கண்டுபிடிப்பாக 'கணைய புற்றுநோய்க்கு' நம் மரபு மருத்துவமுறையான சித்தமருத்துவத்தில் மூலம் மருந்து ஒன்றை தயாரித்து உள்ளார். 2014 ம் ஆண்டு முதன்முதலாய் சந்தித்தபோது தான் தெரிந்தது அவர் பல தொழில்கள் செய்து தனது 25 வயதிலேயே பெரிய தொழில் அதிபராக வளம் வந்தவர் என்று, அது மட்டும் இன்றி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு வரும் மின்னஞ்சல்களை சீரமைக்கும் பணிக்கான போட்டியில் தன் திறமை மூலம் வெற்றி பெற்றார், அதன் மூலம் ஜனாதிபதியுடன் உணவு விருந்துக்கு அழைப்பு பெற்றார் என்பது குறிப்பிட தக்கது. இவ்வளவு சாதனைகள் செய்தவர், பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், அவ்வளவு அழகான தமிழில் பிழை இல்லாமல் உரையாற்றியது எங்களை ஆனந்த வெள்ளத்தில் ஆற்றியது.
அவரின் அனுபவங்கள், வணிக அறிவு எங்களை உலகளாவிய அளவில் விரிவடைய ஒரு தீர்க்கமான உந்து சக்தியாக திகழ்ந்தது. தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்தால் போதாது, நம் அறிவியல் அறிவை உலக மக்களுக்கு பயன் தரும் வகையில் செய்ய வேண்டும் என்று கூறுவார், சித்த மருத்துவம், யோகம் போன்ற நமது மரபுகளை நெறிப்படுத்தி பல்வேறு நோய்களில் இருந்து மனித இனத்தை குறைந்த செலவில் காக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம், மரபணு மாற்று உணவு பொருட்களுக்கு எதிராக உலகளாவிய போராட்டங்களை முன்னின்று செய்து வருகிறார். தற்போது அமெரிக்க செனட் தேர்தலில் சுயேட்சியாக போட்டியிட்டுவருகிறார்.
----------------------------------------------
நம் தமிழ் மண் எத்தனை எத்தனை அற்புதமான மனிதர்களை நமக்கு கொடுத்துள்ளது, அவற்றுள் சிலரிடம் கிடைத்த அறிமுகமே எங்கள் வாழ்வில் ஒரு தெளிவான பாதையை அமைத்து தந்துள்ளது என்றால், இது போன்ற மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எங்களை மென்மேலும் வளரச்செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி: Lemuria Studio | News 7 Tamil | History TV | Inventor of Email