
குறிஞ்சி - தலைவன் கூற்று
யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர், பிரிவரெனக்கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது.
பாடியவர்
செம்புலப் பெயனீரார். (தன் பாடல் தொடரால் பெயர் பெற்றுள்ள புலவர்)
பாடல் தரும் செய்தி[தொகு]
கள்ளத்தனமாக முதல் உடலுறவு முடிந்தபின் அவன் பிரிந்துவிடுவானோ என்று அவள் கலங்கியபோது அவன் சில சொல்லித் தேற்றுகிறான்.
என் தாய் யாரோ உனக்குத் தெரியாது. உன் தாய் யாரோ எனக்குத் தெரியாது. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் இதுவரையில் எந்த உறவினரும் அல்லர். இந்த நிலையில் நம் அன்பு நெஞ்சங்கள் ஒன்று கலந்துள்ளனவே! நல்ல செம்மையான நிலத்தில் மழை பெய்து பயன்படுமாறு போல நம் கலப்பு நல்ல பயனை விளைவிக்கும் - என்கிறான்.