காக்கும் காவல் தெய்வங்கள்

காக்கும் காவல் தெய்வங்கள்காக்கும் காவல் தெய்வங்கள் பற்றிய கதை


தமிழர் நாகரிகமும் பண்பாடும்:


தமிழ் பாரம்பரியம் பல ஆயிரம் கதைகளை தன்னுள் சுமந்து கொண்டு உள்ளது. அவை மூலம் உயிர்ப்பு மிக்க நாகரீகம், தமிழ் நாகரீகம் என்பது நமக்கு தெரிய வருகின்றது. தமிழ் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில் இருப்பதிலேயே பழமையான ஆதாரமான தொல்காப்பியம் தான் இன்று வரை நம் கையில் இருக்கும் ஒரே புதையல். ஆதியில் தமிழர்கள் மலைவாழ் குடிகளாக இருந்தனர். அவர்களின் வழிபாடு திணை வழிபாடாக இருந்தது. நான்கு திணைகளுக்கு நான்கு கடவுள்கள் என வணங்கி வந்தனர். அவர்களில் பிரதானமான குறிஞ்சி நில கடவுளான முருகர் இன்று தமிழ் கடவுளாக இந்த மாநிலமெங்கும் போற்றப்படுகிறார்.

சேயோனின் அறிமுகம்:

நாகரீகம் என்னும் பெயரில் நாம் நம் வரலாறுகளை, கதைகளை மறந்து கொண்டு வருகிறோம் . சாமிகளை ஆன்மீகம் எனும் வட்டத்திற்குள் அடைத்து, அந்த கதைகளை மூட நம்பிக்கையாக கருதும் இளைய சமுதாயத்திடம் பாத்திரமான இந்த கதைகளை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு சிறு துளியே "காக்கும் காவல் தெய்வங்கள் " எனும் இந்த தொடர்.

ராம் – ஜானுக்களின் காதல் கதைகளை கேட்டவர்களுக்கு மதுரை வீரன் – பொம்மி போன்ற மறக்கப்பட்ட காதல் கதைகளை அறிமுகப்படுத்த, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இல்லாத காலத்தில் நடந்த சாதிக் கொடுமைகளை எதிர்த்து உயிர்நீத்த முத்துப்பட்டன், பலவேஷக்கார சாமி போன்றவர்களின் கதையை சொல்ல, இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி. இந்த கால Money Heist போன்ற விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட அந்த கால மாந்தர்களின் கதைகள் உங்களுக்கு சுவாரசியத்தை தரலாம். கடந்து வந்த பாதைகளை தேடி செல்ல உதவலாம். மனித குல போராட்டங்களில் உயிர் நீத்த ஜீவன்களுக்கு காட்டும் ஒரு வகை ஆறுதலாக கூட இருக்கலாம். இன்று நாம் நம் மண்ணிற்கு சற்றும் தொடர்பு இல்லாத தெய்வங்களை தரவிறக்கம் செய்து வழிபடுகிறோம். ஆனால் நம் மண்ணிற்கும், நம் குடும்பத்திற்கும் கூட நெருக்கமான குல தெய்வங்களின் கதைகளை நாம் அறிந்து கொள்வதே இல்லை. ஹாலிவுட் படங்களின் தாக்கங்களால் கிரேக்க கடவுள்களின் பெயர்களை மனப்பாடமாய் சொல்லும் இளைய தலைமுறையினருக்கு தமிழ் சார்ந்த காவல் தெய்வங்களின் பெயர் வாயில் நுழையாமல் போனது தான் இன்றைய நிதர்சனம். இந்த இணைய தொடர் உங்களை, இந்த மாநிலமெங்கும் எல்லைகளில் நம்மை வழி அனுப்பியும், வரவேற்றும் நிற்கும் எல்லை தெய்வங்களின் பல கதைகளின் வழியே நம் முன்னோர்களை அறிய வழி செய்வதனால் என் பேனா முனை பெருமை கொள்கிறது. இந்த வரலாற்று மீட்சியில் என்னோடு பயணிக்க உங்களை வாஞ்சையோடு வரவேற்கிறேன்.


“தந்தனத் தோம் என்று பாடியே வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே ” என வில் பூட்டி பாடிய பல நாட்டுப்புற கலைஞர்களின் வாய் வழியே பாடப்பட்ட பாடல்களை கதையாக ஒரு பயண வடிவில் வர்ணிக்க உள்ளேன். பயணம் முழுக்க, காவல் தெய்வங்களின் பாதங்களுக்கு சமர்ப்பணம்.


கதைகள் தொடரும் ......

வாட்சப் தமிழா விவேக்