காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்

திருட்டை தடுக்க கட்டிய வைகை அணை:


மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டு அவற்றை உணர்ந்து தீர்ப்பதில் காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே.

அப்படி மக்களைச் சந்திக்கத் தேனிக்கு சென்ற நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், "ஆண்டிபட்டி மலைக் கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளைச் சிலர் அபகரித்துச் செல்கின்றனர். அதனை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராசர், "கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் "இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.

சட்டமன்ற உறுப்பினரோ, நாம் திருட்டு பற்றிக் கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, "பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர்? அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணைக் கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார்.

/>

கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கிப் பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்துப் பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடனே செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்சக்கணக்கான ஏக்கருக்குப் பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

காமராசர் கட்டிய அணைகள்:

தமிழகத்தில் ஆறுகளுக்குப் பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை நதி என ஆறு பல ஓடியது.

அணை கட்டும் தொழில்நுட்பமே உலகம் அறியாத காலத்தில் தமிழகத்தில் முதன் முதலில் அணை கட்டியவர் கரிகாலன்!

அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டூர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி குந்தா அணை பெறப்பட்டது.


அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)பட்ட அந்த நெடிய பட்டிட்யலை பாருங்கள்.

  • 46,000 ஏக்கர் பாசன வசதியில் மலம்புழா அணை
  • 20,000 கூடுதல் பாசன வசதியில் தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை
  • 47,000 ஏக்கர் பாசன வசதியில் அமராவதி அணை
  • 20,000 ஏக்கர் பாசன வசதியில் சாத்தனூர் அணை
  • 20,000 ஏக்கர் பாசன வசதியில் வைகை அணை
  • 6,500 ஏக்கர் பாசன வசதியில் வாலையார் அணை
  • 6,000 ஏக்கர் பாசன வசதியில் மங்கலம் அணை
  • 1,100 ஏக்கர் பாசன வசதியில் ஆரணியாறு அணை
  • 7,500 ஏக்கர் பாசன வசதியில் கிருஷ்ணகிரி அணை
  • 45,000 ஏக்கர் பாசன வசதியில் மேட்டூர் பாசன கால்வாய்
  • புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்
  • 2,00,000 ஏக்கர் பாசன வசதியில் கீழ் பவானி திட்டம்
  • 36,000 ஏக்கர் பாசன வசதியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம்
  • 22,000 ஏக்கர் பாசன வசதியில் புள்ளம்பாடி திட்டம்
  • 4,000 ஏக்கர் பாசன வசதியில் மீனக்கரை ஏரித்திட்டம்
  • 4,000 ஏக்கர் பாசன வசதியில் மணிமுக்தா நதித்திட்டம்
  • 8,000 ஏக்கர் பாசன வசதியில் கோமுகி ஆற்றுத்திட்டம்
  • 2,500 ஏக்கர் பாசன வசதியில் தோப்பியார் ஏரி

  • மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டு விளம்பரமே இல்லாமல் மறைந்தவர் பெருந்தலைவர்!

அணைகளும் அதனால் பயன்பெறும் ஊரும்:

  • அணையின் பெயர்ஊர்பாசன வசதிதிட்ட மதிப்பு
  • (அன்றைய தேதியில்)

மலம்புழா அணை கேரளம் 46,000 ஏக்கர் 5 கோடி மணிமுத்தாறு அணை திருநெல்வேலி 20,000 ஏக்கர் 3 கோடி அமராவதி அணை திருப்பூர் 47,000 ஏக்கர் 3 கோடி சாத்தனூர் அணை திருவண்ணாமலை 20,000 ஏக்கர் 2.5 கோடி வைகை அணை மதுரை 20,000 ஏக்கர் 2.5 கோடி வாலையார் அணை பாலக்காடு 6,500 ஏக்கர் 1 கோடி மங்கலம் அணை கேரளம் 6,000 ஏக்கர் 50 லட்சம் ஆழியாறு அணை பொள்ளாச்சி 1,100 ஏக்கர் 1 கோடி கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி 7,500 ஏக்கர் 2 கோடி மேட்டூர் பாசன கால்வாய் சேலம் 45,000 ஏக்கர் 2.5 கோடி கீழ் பவானி திட்டம் ஈரோடு 2,00,000 ஏக்கர் 10 கோடி புள்ளம்பாடி திட்டம் திருச்சி 22,000 ஏக்கர் 1.5 கோடி மீனக்கரை ஏரித்திட்டம் கேரளம் 4,000 ஏக்கர் 1.5 கோடி தொட்டிப் பாலம் கன்னியகுமாரி 2,500 ஏக்கர் 13 லட்சம் மணிமுக்தா நதித்திட்டம் கள்ளக்குறிச்சி 4,000 ஏக்கர் 75 லட்சம் அணைகளின் முழு விவரங்கள்:

  • கர்மவீரர் காமராசர் மக்கள் நலனில் பெரிதும் முன்னெடுப்பவர் தனக்குப் பின்னல் வரும் சந்ததிகளும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களைக் கட்டினார். அவ்வாறு கட்டப்பட்ட சில முக்கிய அணைகளின் விவரத்தினை காண்போம்.

மலம்புழா அணை:


  • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மலம்புழா அணை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை அன்றைய மதராஸ் முதல்வர் மு. காமராசரால் திறக்கப்பட்டது.
  • மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் கீழ் இருந்தது. அந்த நாளில் அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. வயல் வேலிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பு என்பதால் அம்மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை ஏற்படுத்தித் தர பிரதப்புழா நதியின் துணை நதியான மலம்புழாவில் அணையைக் கட்ட அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு 1949 - ம் ஆண்டு முடிவு செய்து 1955-ல் மதராஸ் முதல்வர் திறந்து வைத்தார். 236.69 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மலம்புழா அணை இன்று கேரளாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகத் திகழ்கிறது.
  • கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளம் ஆகஸ்ட் மாதம் 2018- ல் தொடர் மழையின் காரணமாக மிகப் பெரிய இயற்கை பேரிடருக்கு ஆளானது. தொடர் மலையின் காரணத்தால் கேரளத்தின் 22 அணைகளின் உபரி நீர் திறக்கப்பட்டது. 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தும் 29 பேர் பலியாகியும் இன்னல் பட்டனர். இந்த பருவமழை தீவிரத்திலிருந்து மக்களை காப்பாற்றியது மலம்புழா அணை மட்டுமே இந்த அணை மட்டும் இல்லையெனில் கேரள மாநில மக்களின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த பெரும் துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றியது ஒரு தமிழன் கட்டிய அணை என்பது என்றும் பெருமைக்குரியதே.

மணிமுத்தாறு அணை:

  • மேற்குத் தொடர்ச்சி மலை பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு பகுதியில் அருவியாக விழுந்து கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
  • மழைக்காலங்களில் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க 1958-ல் அப்போதைய முதல்வர் திரு. காமராசரால் வந்த அணைத்திட்டம் தான் மணிமுத்தாறு அணை. சுமார் 3 கி.மீ நீளம் கொண்ட இந்த அணையின் ஆழம் 118 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 5,511 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் தேக்கப்படும் நீர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர், கரிசல் பட்டி, திசையன் விளை என சுற்றியுள்ள 65,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசனவசதி தருகிறது.

அமராவதி அணை:

  • திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இந்திரா காந்தி வனவிலங்கு ஆய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்து உள்ளது அமராவதி அணை. 1957-ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே 4 டி. எம். சி நீர்த் தேக்கக் கொள்ளளவில் கட்டப்பட்டது . 1976 - ல் சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் எனச் சொல்லப்படும் Mugger வகை முதலைகளைத் திறந்தவெளியில் இயற்கையாக வளர்க்க முதலை பண்ணை ஒன்றை நிறுவியும் அணையின் அருகாமையில் அழகான பூங்கா ஒன்றை அமைத்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது அமராவதி அணை மீன்கள் ஊர்வனங்கள் பாலூட்டிகளை உண்டு வாழும் முதலைகள் சிறிதும் பெரிதுமாக ஒன்றின் மேல் ஒன்று விளையாடுவதை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் முதலை பண்ணையைக் காண வனத்துறை ஆய்வகம் ஒன்றையும் நிறுவி உள்ளது. இவை மூலம் வரும் வருமானம் அணை பராமரிப்புக்குப் பயன்படும் எனும் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கியவர் காமராசர்.

சாத்தனூர் அணை:

  • திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னகேசவ மலைகளுக்கு இடையில் கட்டப்பட்ட அணை தான் சாத்தனூர் அணை. தமிழகத்தில் உள்ள முக்கியமான அணைகளில் சாத்தனூர் அணையும் ஒன்று. திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை 1958-இல் காமராசர் அவர்களால் கட்டப்பட்டது.
  • அமராவதி அணை போலவே இங்கும் அழகிய பூங்காவும் முதலை பண்ணையும் உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7321 மில்லியன் கன அடி நீரினை சேமிக்க முடியும். இன்றளவும் திருவண்ணாமலை நகர் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமும் பாசன வசதியும் அளித்து வருகிறது.

வைகை அணை:

  • தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைகை ஆற்றிற்குக் குறுக்கே 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட அணைக்கட்டு தான் வைகை அணை. இன்றளவும் மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான நீரையும் குடிக்கக் குடிநீரையும் வழங்கி வருகிறது. 111அடி உயரம் கொண்ட இந்த அணையில் 6000 கன அடி நீரை சேமித்து வைக்க முடிகிறது. அணைக்கு இருபுறமும் இருக்கும் இடத்தை மக்கள் பயன்பெறும் வகையில் அழகிய பூங்காக்களும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ஒரு பகுதியில் விளையாட்டு திடலுக்கு அமைத்தார். வைகை அணை பூங்காவை அடுத்து மிருகக்காட்சி சாலை ஒன்றையும் அமைத்து அதனைப் பார்வை இடுவதற்குத் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆழியாறு அணை:

  • கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சிறு நீர்த்தேக்கமாக அமைந்துள்ளது ஆழியாறு அணை. இங்கும் மக்களின் மனமகிழ்விற்காகப் பூங்கா மீன் காட்சியகம் தீம் பூங்கா முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை 1962ஆம் ஆண்டு காமராசரால் அமைக்கப்பட்டது. கோவையிலிருந்து 65கி.மீ தொலைவில் உள்ள இந்த அணையில் அருகில் மலையேறினால் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த அருவியினை காட்சிப்படுத்தி உள்ளனர்.

கிருஷ்ணகிரி அணை:

  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும் கிருஷ்ணகிரி அணை. 1958இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள் இதன் மூலம் 3652 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த அணைப் பகுதியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.


தொட்டிப்பாலம்:

  • தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டில் வடிவில் அமைப்பு கொண்டது மாத்தூர் தொட்டிப் பாலம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான வறட்சியை தீர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் காமராசரால் கட்டப்பட்டது இந்த தொட்டிப்பாலம். இதற்கான நீரை பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்னும் சிற்றாறும் பாய்கிறது. ஆக மேலே கீழே என இரண்டிலும் நீர் ஓடுவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது. இரண்டு மலைகளை இணைக்கும் இந்த பாலம் 1204 அடி நீளமாகவும் தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

முடிவுரை:

  • மக்களுக்காகவே நான் மக்களிலிருந்தே நான் என வாழ வெகு சிலரால் மட்டுமே முடியும். தன் சக மக்களுக்கு இது தேவை அடுத்து வரப் போகும் சந்ததிகளுக்கு இது தேவை என தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அவர் தீட்டிய திட்டங்களின் பயனே இன்று அனைவரும் படிக்கும் பள்ளிகள்; பசிக்கு உண்ணும் உணவுகள்; பொருள் தரும் தொழிற்சாலைகள். இனி வரும் காலங்களில் இவரைப் போல் ஒருவர் வாழ்வது அரிதே என உணர்த்தி மறைந்தவர் மக்கள் முதல்வர் நம் காமராசர்.

காமராசர் அவர்களின் வாழ்கை வரலாறை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.