சல்லிக்கட்டு எந்த இடத்தில் உருவாகியது தெரியுமா ?
சல்லிக்கட்டு - ஹரப்பா 'டு' அலங்காநல்லூர் (வழி 'தமிழ்நாடு')
Image Credit: skcript.com | Case-study Jallikattu 2017
"ஏலே ஆடு மாடு மேலே உள்ள பாசம்
வீடு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்"
என்ற நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் தமிழ் பண்பாட்டில் கால்நடைகள் குறித்த முக்கியத்துவத்தை கிராமிய பாணியில் பசுமரத்தில் ஆணியாய் பதிவு செய்துவிட்டது. இந்த கட்டுரை எழுதுவதற்கு முன்னர் இந்த கட்டுரைக்கான தலைப்பிற்கான காரணத்தை கூற ஒரு சிறு கதையோடு ஆரம்பிக்கிறேன்.
சல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த நேரம். இந்திய தேசத்தின் தென்கோடி எல்லையில் சல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டிருந்த போது காவலர் ஒருவர் " மதுரை சம்மந்தப்பட்ட விஷயத்தை ஏன் இங்க கொண்டு வந்து திணிக்குறீங்க ? " என்று கேட்டார். அவர் கூறியது போல சல்லிக்கட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கான விளையாட்டா ? இதற்கான பதிலை தேடிய பயணமாய் சல்லிக்கட்டு எனும் பேருந்தில் ஏறுவோம். ஒவ்வொரு பேருந்தும் அதன் துவங்கும் ஊரிலிருந்து தானே கிளம்ப முற்படும். சல்லிக்கட்டு எனும் இப்பேருந்து ஆரம்பித்த இடம் தமிழகமாயினும் சங்க காலத்திற்கு முன் உள்ள தடயங்கள் கைக்கு கிட்டாததால் எஞ்சிய அடையாளங்கள் காணப்பெறும் சிந்து சமவெளி நாகரீகத்தின் ஹரப்பா மண்ணிலிருந்து துவங்குவோம்.
5000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீக புல்வெளிகள் ஆயிரக்கணக்கான காளைகளையும் பசுக்களையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. அங்கே நம் பேருந்தின் சன்னல் வழியே ஒரு காட்சியை பார்த்தோம், ஒரு மந்தை பசுக்களும் காளைகளும் நகர்ந்து செல்கின்றன. அதில் ஒரு இளம் காளை திடீரென மந்தை செல்லும் திசையிலிருந்து மாறி ஓடலாயிற்று. அதை மேய்ப்பவன் ஓடி சென்று அந்த காளையை பிடிக்க முற்படுகிறான். ஆனால் பிடிக்கு சிக்கவில்லை அந்த இளம் காளை, இறுதியில் அதன் திமிளை பிடித்து நிறுத்தி அதனை தன்னோடு தழுவிக்கொள்கிறான். மாடும் தன் வேகத்தை குறைத்துக் கொண்டு மந்தையோடு சேர்ந்து செல்ல ஆரம்பிக்கின்றது. அந்த மேய்ப்பனை அவனது நண்பர்கள் புகழ்கிறார்கள். இவ்வாறு பல ஆண்டு காலம் தங்களது மாடுகளை ஒழுங்கு செய்ய அதனை தழுவ ஆரம்பித்து அதுவே ஒரு விளையாட்டாக மாறிப்போனது, அது தான் ஏறுதழுவுதல்.
நம் சல்லிக்கட்டு பேருந்து இப்பொழுது பல ஆயிரம் ஆண்டுகள் பல்வேறு விதங்களாக உருவெடுத்து ஏறுதழுவல் என்பது சல்லிக்கட்டு என மாறிய காலத்திற்கு வந்து நின்றது. ஏறு தழுவுதல் துணிச்சலும் அன்பும் கலந்த ஒரு வீர விளையாட்டு. அதற்கு மதிப்பளிக்கும் பொருட்டு பொன்னால் ஆன சல்லிக்காசுகளை மாட்டின் கொம்பில் கட்டி விட்டு அதை அவிழ்த்து எடுப்பவர் வெற்றி பெற்றவர் என விளையாடும் பாணியை கொண்டு வந்தனர். சல்லிகாசுகளை கொம்பில் கட்டி விளையாடுவதால் ஏறுதழுவுதலுக்கு சல்லிக்கட்டு எனும் பெயர் வந்தது. இந்த நீண்ட நெடிய பயணமானது 21 ஆம் நூற்றாண்டிலும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பதை காட்டி பேருந்து சென்று கொண்டிருந்த வேளையிலே சிலரின் சுயநலத்திற்காக சல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அங்கே நாமும் பேருந்திலிருந்து இறங்கி கொள்ள வேண்டியதாயிற்று. தமிழ் பேசவும் தமிழ் பண்பாட்டோடு வாழவும் தயங்கி நின்ற தமிழர் கூட்டமும் நம்மோடு இறங்கியது.
Image Credit: Harappa.com | Backgroundimgfer.pw | Harappan Culture Seal | Indus Valley Civilization
"எங்கோ இருந்து வந்த கூட்டம் நம் பண்பாட்டிற்கு தடை விதிப்பதா ?'' என தன்னை தானே கேட்டுக்கொண்டு தமிழ் மக்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு பயணப்பட துவங்கினார்கள்.அதுவே “தை புரட்சி”.சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்திய தேசத்தை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது சல்லிக்கட்டிற்காக தமிழ் மண் முன்னெடுத்த போராட்டம். அது போராட்ட வடிவிலான தமிழ் பாரம்பரியத்தின் கொண்டாட்டம் எனவே கூறலாம். அங்ஙனம் அக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்த ஒருவரின் குரல் இதோ “ ஒரு ருபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட காளையை அச்சிட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த நாட்டின் ஒரு அங்கமாக வீரத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன காளைகள் ". சல்லிக்கட்டு மீதான வழக்கென்பது வெறும் விலங்குகள் நல வழக்கு அல்ல.
அழிந்து வரும் விலங்குகளை காப்பதென்றால் பன்றிகளும் குதிரைகளும் இன்னும் பல்வேறு நாட்டு விலங்குகள் அழிந்து வருகின்றன. அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாமே.இந்த வழக்கென்பது கார்ப்ரேட் சதி. அதை தகர்க்கவே நாங்கள் போராட்டக் களத்தில் நின்றோம். கார்ப்ரேட் நிறுவனங்களை கால் ஊன்ற விடாமல் தடுத்த பெருமை சல்லிக்கட்டு போராட்டத்தை சாரும்.”
இந்த குரல் சல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த "பழைய வண்ணாரப்பேட்டை" திரைப்படத்தின் இயக்குனர் திரு.மோகன் சத்ரியன் அவர்களுடையது. இந்த நாட்டின் மகத்தான சக்தி இளைஞர்கள் என்பதை மற்றும் ஒரு முறை நிரூபிக்கும் வண்ணம் சல்லிக்கட்டின் மீதான தடையை அரசாங்கமே தூக்கி எரிந்து அதற்கான அவசர சட்டத்தையும் கொண்டு வர வைத்தனர் தமிழக இளைஞர்கள். அன்று நிமிர துவங்கியது தமிழர்களின் தலை. அந்த தை நிமிர்வு தமிழ் மண்ணில் சிறிது சிறிதாக தற்சார்பு குறித்த விழிப்புணர்வை விதைத்துக்கொண்டே இருக்கின்றது.
Image Credit: kenphan.info | Gangaikonda Cholapuram History
சல்லிக்கட்டு மீது தடை என்பது சாதாரண விலங்கு நல வழக்காக இருப்பினும், அது இந்திய தேசத்தின் பால் உற்பத்தியின் மீது அந்நிய பெரு நிறுவனங்கள் வீசிய வலை. ஆண்டிற்கு சராசரியாக 5 லட்சம் கோடி வணிகம் ஈட்டும் இந்தியாவின் பால் வணிகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் அது சார்ந்த இயற்கை முறை பால் உற்பத்தியின் மதிப்பு 80 ஆயிரம் கோடி. நாட்டு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை விட சொற்ப அளவில் பால் உற்பத்திக்கு பங்களிப்பு கொடுத்தாலும் நாட்டு மாடுகள் இந்த துணை கண்டத்தில் தனது இன விருத்தியால் மாட்டினங்களையும் விவசாயத்தையும் அழியாமல் காக்கின்றன. தமிழகத்தின் அடையாளமாக கருதப்படும் காங்கேயம் காளைகளோடு சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 6 நாட்டு மாடு இனங்கள் தான் இப்போது அழியாமல் உள்ளன. அவற்றின் பண்புநலன்களை குறித்து இயற்கை விவசாயி மற்றும் சல்லிக்கட்டு ஆர்வலர் திரு.ஹிமாகிரண் அங்குலா கீழ் வரும் விவரங்களை கூறுகிறார்.
''காங்கேயம் காளைகள் கால்சியம் சத்து நிறைந்த மண்ணில் வாழ்ந்து வருவதால் அவற்றின் இழுத்திறன் அவைகளின் உடல் எடையிலிருந்து 2.5 தரம் அதிகமாக இருக்கும்.உம்பளச்சேரி காளைகளுக்கு கால்கள் உயரம் குறைவாக இருப்பதனால் நீர் நிறைந்த டெல்டா வயல்களில் நடந்து உழவுக்கு வலு சேர்கின்றன.மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களை பூர்வீகமாக கொண்ட புலிக்குளம் வகை மாடுகள் சல்லிக்கட்டுக்கு பெருவாரியாக பங்கு கொள்கின்றன. திருவண்ணாமலை ஆலம்பாடி, தேனி மலைமாடு மற்றும் ஈரோடு பர்கூர் மாடுகள் பிரசித்தி பெற்றவை. அவற்றின் மூலம் பல்வேறு வகையான நலன்கள் விவசாயத்துக்கு சென்று அடைகின்றன''
இந்த தகவல்களை அளித்த திரு. ஹிமாகிரண் அவர்கள் சல்லிக்கட்டுக்காக போராடிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். தொடர்ந்து இயற்கை விவசாயத்துக்காக பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறார். 100 வருடங்களுக்கு முன்னர் 130 வகை நாட்டு மாடு இனங்களை கொண்ட இந்திய தேசம் இப்போது வெறும் 37 வகை நாட்டு நாடுகளோடு இன்று நிற்கிறது. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 48 சரத்தின் படி நாட்டின் பூர்வீக விலங்கினங்களை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும். அதை சிறிது காலத்திற்கு மறந்து இருந்த அரசை நினைவுகூர வைத்த தைபுரட்சி சல்லிக்கட்டு போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல். நாட்டு மாடு இனங்கள் தங்களது வாழ்விடங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருவதால் அவை இந்த மண்ணோடு கலந்து இந்த மண்ணின் நலத்திற்காக வாழ்ந்து வருகின்றன. மேற்கூறிய காங்கேயம் காளைகள் இன விருத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன.
காதலும் காமமும் மனிதனுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்த அத்தனை உயிர்களுக்கும் உண்டு. காங்கேயம் காளைகள் பசுக்களுக்கு செய்யும் சேவை அளப்பரியது. சல்லிக்கட்டு எனும் நிகழ்வு இல்லாவிடில் பிறந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது போல பிறந்த ஓரிரு வாரங்களில் இறைச்சிக்காக அடிமாடுகளாக அனுப்பப்பட்டிற்கும் இந்த கம்பீரமான காளைகள். நாட்டின் மிகப்பெரிய வணிகமான மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு சல்லிக்கட்டின் மீதான தடை இனிப்பு சாப்பிட்டதை போன்ற உணர்வை கொடுத்தது. மேலும் ஆட்டிறைச்சி என நாம் வாங்கும் பெரும்பான்மை கறிகளில் பிறந்து ஓரிரு வாரங்கள் ஆன காளை கன்றுகளின் இறைச்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. இது போன்ற துயரங்களை வெகுவாக குறைத்துள்ளது சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்களின் தை புரட்சி போராட்டம். நாட்டு மாடு இனங்களை பெருவாரியாக பெருக்கி இயற்கை முறை பால் உற்பத்தியை தொழிலாக செய்ய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது நல்ல மாற்றங்களுக்கான குறியீடு.
மூடப்பட்ட வாடிவாசல் முடுக்கி விட்டது காளைகளை மட்டுமல்ல நம் பண்பாட்டின் தொன்மையையும் தான் !!!