அப்படி ஒரு நாள் டேர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது
" இதய ஸ்மைலி அனுப்பினால் உங்களை பற்றிக் கூறுகிறேன்" என்ற ஸ்டேடஸ் வைத்ததும் என் வாட்சப் இதயங்களால் நிறைந்தது. வந்த ஒவ்வொரு இதயத்திற்கும் வாஞ்சை செய்து கொண்டிருந்த நேரத்தில்
" எனக்கும் நாலு வார்த்தை சொல்லுங்களேன். உங்ககிட்ட இருந்து கேக்கணும் போல இருக்கு,என்னை பத்தி " என்ற தமிழினியின் குறுஞ்செய்தி அவளுடன் மறுபடியும் பேச வைத்தது.
அப்படியாக ஆரம்பித்தது எங்கள் நட்பு. தமிழினி தேவதைகளின் சாயலில் இருப்பதால் மனதுக்கு பிடித்துப் போகவில்லை. நான் தவறவிட்ட கண்ணம்மாவின் நகலாக இருந்ததால் மனதுக்கு பிடித்து போய்விட்டது. டெட்டி பியருக்கு சேலை கட்டிவிட்டால் எவ்வளவு பாந்தமாக இருக்குமோ அப்படி ஒரு கண்மணி அவள். கதைகள் பகிர்ந்து கொண்டோம். தன்னை சுற்றி வரும் ஆடவர்களை பற்றி எல்லாம் அவள் வர்ணித்துக் கூறும் போது வயிறு மட்டுமல்ல இன்னமும் என்ன என்ன எரிந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டோம். தமிழினி அப்போது பிரபல மாத இதழில் எழுத்தாளராக இருந்தாள். அவள் எழுதுவதை விட எனக்கு அவளிடம் பிடித்ததே பேச்சு தான். தன்னிடம் பேசும் எல்லா ஆண்களையும் தராசில் ஏற்றிப் பார்க்கும் பெண்களுக்கு மத்தியில் , எல்லையில்லா அன்பு செய்து என் ரணங்களுக்கெல்லாம் மருந்திட்ட அவளை தேவதை என்று வர்ணித்தால் அது பாவம், அவள் தேவதைகளுக்கு மேல் அழகு சேர்க்கும் ஒரு யட்சி. ஒரு பெண் என்றாவது ஒரு கணப்பொழுது தான் தன்
மொத்த அழகையும் ஏதோ ஒரு செய்கையின் மூலம் உலகுக்கு உணர்த்துவாள். அந்த நொடியை தான் யட்சி என்று கூறுவார்கள்.
தமிழினி அனுதினமும் எனக்கு யட்சியாகவே தெரிந்தாள்.
க்வாரண்டைன் காலங்களில் என் எக்ஸ் பத்திரமாக இருப்பாளா என படபடக்கும் போது இவள் வந்து காறித் துப்பி, அவள் இன்னொருவன் மனைவி என்ற கசப்பான பொய்யை மறுபடியும் மறுபடியும் அழுத்திச் சொல்வாள்.
அன்பிற்கினியவர்கள் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் வலிக்காத மனதினை டிசைன் செய்த கடவுளுக்கு கோடானு கோடி நன்றிகளே காணிக்கை.
ஒரு புறம் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து மக்களையும், ஓயாமல் ஆட்கொள்ளும் கடந்த காலத்திலிருந்து என்னையும் விடுதலை செய்ய வேண்டி கடவுளுக்கு எழுதிய கடுதாசிகளில் ரகசியமாக அவள் பெயரும் இருந்தது.
இன்னுமொரு காதல் என்பது பாவச் செயலோ என்று தள்ளி நின்றாலும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என அடுத்த நாள் பொழுது புலர்வதிலிருந்து வானம் இருண்டு போகுமட்டும் பேசுவோம் .
கீர்த்தி சுரேஷின் கல்யாணம் துவங்கி
லாக்டவுனின் போது உள்ள சிரமங்கள் வரை அத்தனையும் கதைப்போம்.
ஆளுமைத்தன்மையோடு கூடிய அவளின் திமிரில் என்னை அறியாமல் கரைந்து கொண்டு இருந்தேன்.
பெண்ணுக்கு திமிரழகு:
பத்தாவது நாள் இரவும் வந்தது. 8.55 க்கு விளக்கு ஏற்றி ஒற்றுமையை தெரிவிக்க மக்கள் ஒன்று கூடிக் கொண்டிருக்கும் போது
நான் நம் பிரதமர் எப்படியும் வேலைக்காரன் இந்தி டப்பிங் பார்த்து இருப்பார் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
மனதில் தைரியத்தை வர வைத்து அந்த 9 நிமிடங்களுக்குள் என் வாழ்விலும் விளக்கேத்த அந்த கைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.
தமிழினி அட்டெண்ட் செய்தாள். அகல்விளக்கு வெளிச்சம் போல அவளது குரல் மனதிற்குள் இருந்த துக்க இருளை விரட்டியது. 9 நிமிடங்கள் முடியும் தருவாயில் எங்கள் உரையாடல் துவங்கிற்று
ஏங்க நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா ?
ம்ம்ம் சொல்லுங்கங்க
இல்ல இன்னைக்கு நைட் எங்க வீட்டுலயும் விளக்கு ஏத்துறோம் ...
அதுக்கு நான் என்ன பண்ண
இல்ல ..நீங்க வந்து விளக்கு ஏத்துனா தானே முறைப்படி கரெக்டா இருக்கும் ..
ஒரு நொடி மெளனம்
போங்கக்க...
என்ற வெட்க புன்னகையோடு அழைப்பை " மட்டும் " துண்டித்தாள்.
வெளியே பட்டாசு சத்தம் கேட்டது. ஏதோ சாதித்தது போல உடலை வெட்டி முறித்தேன்....என்று கதையை முடிக்கும் போது ஆவென்று தனது பூவிதழ் வாயை திறந்து கொண்டு கதையை கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.
" அப்பனுக்கும் மகளுக்கும் வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் கதை பேசுறது தான் சோலி. ஏங்க குழந்தைகிட்ட என்ன கதை பேசணும்னு வெவஸ்த இல்ல " என்று போற போக்கில் என்னையும் சீண்டினாள்.
" அம்மு...அப்போ நிறைய பேர் அந்த நோய் வந்து இறந்து போனாங்க. பாவமா இருந்துச்சு. எப்படியோ கஸ்டப்பட்டு அந்த நோயை ஒழிச்சாங்க. அதுல பேசாம செத்துருக்கலாம். அதுல உயிர் பொழைச்சு உங்க அம்மாகிட்ட வந்து மாட்டிக்கிட்டு தினம் தினம் செத்துட்டு இருக்கேன் "
உடனே என் மகள் தமிழினியை நோக்கி "அச்சச்சோ.... அப்பா பாவம்லம்மா " என்றதும்
விளக்குமாரை எடுத்து ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு
" உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன்னு பாருங்க " என தமிழினி விரட்ட தயாராக.
நான் என் மகளை தூக்கிக் கொண்டு ஓடினேன். வீட்டிலிருக்கும் விஜய் டிவியில் ராஜா ராணி ஓடிக்கொண்டிருந்தது " நம்மகூட இருந்தவங்க நம்மள விட்டு போயிட்டா நம்மளும் போயிடணும்னு இல்ல , என்னைக்காச்சும் ஒரு நாள் நம்ம லைஃப் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும் " என்ற வசனம் வீட்டை நிறைத்தது.... அழகான ராட்சசி
